மானுடம்
வென்றெடுக்கும் சடங்குகள்
- முனைவர். கரு. முருகன்
உலக மானுடக் கட்டமைப்பை காலச் சுழற்சியில்
ஒருக்கினைத்துச் செல்வது இனக்குழுக்களின் சடங்குகள் முக்கியத்துவம் பெருகின்றன. ஒரு
இனத்தின் நாட்டினரோ ஒரு சிறுவகுப்பினரோ அல்லது தனித்தனி ஆட்கள் மட்டிலுமோ செயல்களை
ஒழுங்காகச் செய்து வருவதனையே வழக்கம் என்பர். இதனைப் பிற்காலத்தில் சடங்கு என மறுவியது.
சடங்குகள் ஒரே மாதிரியானவை அல்ல சமுதாயத்திற்குத் தகுந்தபடி மாற்றம் பெற்றுள்ளது. ஒரே
சமூகமாக இருந்தாலும் வாழும் இடத்திற்கு ஏற்ப வேறுபாடான சடங்கு முறைகளினைப் பின்பற்றுகின்றனர்.
இவை தனிமனிதன் சார்ந்ததாகவும், சமுதாயம் சார்ந்ததாகவும் உள்ளன. மனிதன் தனக்காகவும்,
தாம் சார்ந்து வாழும் சமுதாயத்திற்காகவும் கட்டமைத்துக் கொண்டவை தான் இந்தச் சடங்கு
முறைகள்.
சடங்கு என்பது மனித வாழ்க்கையில் பிறிக்க
முடியாத ஒன்றாக உள்ளது. வீட்டில் நடக்கும் நல்லவை, தீயவை இரண்டிற்கும் நல்ல நேரம் பார்த்து
முறைப்படி சடங்குகள் செய்வது என மன நிறைவுக்கு அடித்தளம் அமைக்கின்றனர். சடங்கு என்பது
இன்று தோன்றியவை அல்ல. இனக் குழுவாய் வாழ்ந்த மனிதன் தமக்கு நிகழும் ஒருசில நிகழ்வுகள்
ஏதோ ஒரு குறைபாட்டால் வருவது என்று எண்ணினான். இக்குறைபாடுகளில் இருந்து தம்மை விடுவித்துக்
கொள்ள சில சடங்கு முறைகளினைச் செய்தான். இதனை அடிப்படையாக வைத்து திருமணம், வீடு கட்டுதல்,
வீடு குடியேறுதல் முதலான நல்ல காரியங்கள் தொடங்கும் முன்பும் சில சடங்குகள் செய்கின்றனர்.
இவ்வகைச் சடங்குகள் செய்தால் தாம் தொடங்கும் செயலுக்கு நல்லது நடக்கும் என்று தம் ஆழ்
மனதில் எண்ணினான். இவற்றில் நம்பிக்கையும் வைத்தான். இவ்வனைத்தின் வெளிப்பாடாக வந்தவைதான்
இந்தச் சடங்கு வகைகள். இச்சடங்கு முறைகள் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் தமிழன்
தனக்கென சில வாழ்வியல் சடங்கு முறைகளை வகுத்துக் கொண்டான். மனிதன் பிறப்பு முதல் இறப்பு
வரை அவனது வாழ்வு முழுவதும் சடங்கு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில் கும்பிடுவதாக
இருந்தாலும், திருவிழா கொண்டாடுதல் என அனைத்து நிகழ்வுக்கும் மனிதன் சடங்குகள் செய்தே
பழக்கப்பட்டுள்ளான். இந்த முறைகள் ஒவ்வொன்றும் ஆதி குடி மனிதனிடம் இருந்து வந்தவையாகும்.
நாகரிகம் அடைந்த இன்றைய மனிதனிடமும் நாகரிகமற்ற பழங்குடி மக்களிடமும் சடங்குகள் காணப்படுகின்றன.
சடங்கு என்பது மனித வாழ்வியல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் கட்டுப்பாட்டுடன்
கூடிய செயல் முறையினை அடிப்படையாகக் கொண்ட இறுக்கமான விதிகளை உள்ளடக்கியதாகும். பழந்தமிழ்
நாட்டின் எல்லைகளாக வகைப்படுத்தப்படும் வடக்கில் தக்காண பீடபூமியும், கிழக்கு மேற்கு
தெற்கு கடல் எல்லையாகக் கொண்ட இப்பரப்பளவையும் தாண்டி பொருளீட்டல் வழியாகவும், மூதாதையர்
வாழ்ந்த வழித்தொடர்பாகவும் கடல்கடந்து வாழுகிற தமிழர்கள் இச்சடங்கு முறையை பேனிக்காத்து
வருகின்றனர். குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, கனடா, மொரீசியஸ்,
ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் இன்னும் பிற தமிழர்கள் வாழும் பகுதிகளில் அடுத்த தலைமுறைக்குப்
பதிய மிடுவதைக் கடமையாகக் கொண்டிருக்கின்றனர்.
சங்க இலக்கியம் கி. மு. 300 முதல் கி.
பி. 300 வரை என கால பகுப்பு செய்யப்பட்டாலும் தொல்லியல் ஆய்வின் வழியாக இவ்வரையறை மாற்றம்
பெறுவது அனைவரும் அறிந்தது ஆகும். உதாரணமாக தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டம் கீழடி
கிராமத்தில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ‘மண்பானை, தாயக்கட்டை,
மிளிர் கள் அணிகலன்கள், பெண்கள் அணிந்த சங்குப் பாசி, வளையல்கள், எலும்புக் கருவிகள்,
இரும்பு வேல், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் இன்னும் பிற கருவிகளும் கண்டு
பிடிக்கப்பட்டன. ஆதன், உதிரன், திசன் போன்ற பிராமி எழுத்துக்களால் ஆன தமிழ்ப் பெயர்களும்
கிடைக்கப்பெற்றுள்ளன. கிடைக்கப்பெற்ற பொருட்களை கால கணக்கீடு செய்ய கார்பன் ஆராய்ச்சிக்கு
அனுப்பிய பொழுது 2200 ஆண்டுகள் பழமை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் வழியே தமிழன்
கி. மு. 4 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்தே பண்பாடு சடங்கு போன்ற வாழ்வியல் கூறுகளை
உள்ளடக்கி இருந்தமையை அறியலாம். இதனை இலக்கிய அடிப்படையில் சடங்குகள் திருமணச் சடங்கு,
சகுனம் மற்றும் நிமித்தச் சடங்கு என பல்வகைச் சடங்குகள் தமிழ் மொழி பேசத்தெரியா தமிழர்கள்
கூட பின்பற்றி வருகின்றனர். இவற்றின் ஒரு கூறாக சங்க இலக்கியங்களில் ஆண், பெண் இணையும்
வதுவைச் சடங்கு எனும் திருமணச் சடங்குகள் குறித்து அறிய வருவன.
திருமணமும்
சடங்கும்
மனிதன் செய்யக் கூடிய ஒவ்வொரு செயலிலும்
ஏதேனும் ஒரு சடங்கு இருந்து வருகின்றது. இஃது நாளடைவில் அவனது நம்பிக்கையாகவும் மாற்றம்
பெற்றது. சடங்கின் மூலம் உறவினர்கள் ஒன்று சேர்கின்றனர். தங்களுக்குள் இருக்கும் மனக்
கசப்பினை நீக்கி விட்டு ஒன்றிணைந்து நடத்துவது சடங்கு என்பர். உறவினர்களுக்குள் பகை
இருந்தாலும் தங்களது குல தெய்வம் அல்லது ஏதேனும் கோவிலுக்குச் சென்று சில சடங்கினைச்
செய்து முடித்த பின்பே ஒன்று கூடுகின்ற வழக்கம் இருந்து வருகிறது. முரண்பாடுகள் இருந்தாலும்
திருமணம் நடைபெறும் வீட்டில் அதனைக் காட்டிக் கொள்வதில்லை. திருமணம் என்பது மங்கலம்
நிறைந்த ஒன்றாகக் கருதப்பட்டதாகும். இரு மனங்கள் ஒன்று கூடுவதால் இதற்குத் திருமணம்
எனப் பெயர் வைத்தனர். அதாவது திரு + மணம் என்பது ‘திரு’ எனில் திருமகள், செல்வம், சிறப்பு,
அழகு, பொலிவு, நல்வினை, தெய்வத்தன்மை, பாக்கியம், மாங்கலியம், பழங்காலத் தலை யணிவகை,
சோதிடங் கூறுவோன், மகளிர் கொங்கைமேல் தோன்றும் வீற்றுத்தெய்வம்’ எனப் பொருள் தருகிறது
தமிழ் – தமிழ் அகரமுதலி (மு. சண்முகம் பிள்ளை. ப. 576). ‘மணம்’ என்பது கூடுதல், நறுநாற்றம்,
மணப்பொருள், மதிப்பு, நன்னிலை, எண்வகை மணம் எனப் பொருள் படுவதாக தமிழ் – தமிழ் அகரமுதலி
(மு. சண்முகம் பிள்ளை. ப. 843) விளக்கம் தருகிறது. இவ்விடம் ‘திரு’ என்னும் சொல்லினை
‘தெய்வத்தன்மை’ என்றும், ‘மணம்’ எனும் சொல்லினை ‘கூடுதல்’ எனும் பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம்.
மணம் முடிக்கும் தம்பதியினர் முன்பின் யார் எனத் தெரியாமல், உறவினராக இருந்தாலும் பெரியோர்களால்
நிச்சயிக்கப்பட்டு இரு மனமும் ஒன்றிணைவது என்பது ‘தெய்வ சக்தியால்’ ஆனது என மக்கள்
நம்பி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தெய்வத்தன்மை என எடுத்துக் கொள்ளலாம்.
இதனை சங்க இலக்கியப் பாடலின் மூலம் அறியலாம்.
“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (குறு.
40)
நல்ல பொழுதில் தொடங்கும்
செயல்கள் நன்மை பயக்கும் என்பது பண்டைத் தமிழன் நம்பினான். அதனால் அவர்களின் நிகழ்வுகள்
அனைத்தும் நல்ல காலத்தையும் பொழுதையும் பார்த்தே செய்து வந்தனர். திருமணம் என்பது மனிதன்
மனிதனுக்காக நடத்தப்படும் ஒரு வகைச் சடங்கு ஆகும். மக்கள் தாங்கள் பின்பற்றுகின்ற வாழ்வியல்
அடிப்படையிலும், சமூகச் சூழ்நிலைகளினை அடிப்படையாக வைத்தும் திருமணம் நடத்துகின்றனர்.
கால மாற்றங்களால் திருமண முறைகளில் பல்வேறு மாறுதல்கள் உள்ளன. பண்டைக்காலத்தில் வீரத்தின்
அடிப்படையிலும் சமுதாயப் பிரிவுகளின் அடிப்படையிலும் திருமணம் நடைபெற்றது. சங்க காலம்
என்பது போர்க்காலச் சமூகமாக இருந்தது. இதனால் அக்கால மக்கள் வீரத்திற்கு முக்கியத்துவம்
கொடுத்தனர். வீரத்தில் சிறந்து விளங்கும் ஆண் மனுக்கே பெண் கொடுக்கும் வழக்கம் இருந்ததனை
அறிய முடிகிறது. தற்காலத்தில் வேலை வாய்ப்பினை அறிந்து மணமகனுக்குப் பெண் கொடுப்பது
போன்று.
காலைப்
பொழுதில் திருமணம் முடித்தல்
இன்று உள்ளது போல் அன்றைய காலத்தில் மின்சார
விளக்கு வசதி இல்லாததால் நல்ல நாள், நேரம் பார்த்து காலைப் பொழுதில் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
“வேங்கை தந்த வெற்பணி நன்னாள்” (நற்.
396: 3)
தற்காலத்தில் பல்வேறு
மாறுதல்களைப் பெற்று புதிய சடங்கு முறைகளினைப் பின்பற்றி வருகின்றனர். திருமண நிகழ்வின்
நன்னாளாக ‘மதி உரோகிணியைக்’ கூடிய நாளைக் கருதியமையினை அகநானூறு விளக்குகிறது. தற்காலத்திலும்
காலை நேரங்களில் திருமணம் முடிக்கின்றனர். இரவு நேரத்திலும் திருமணம் முடிக்கும் வழக்கம்
இருந்து வருகின்றது. தற்காலத்தில் தங்களது வசதிக்குத் தக மாற்றியுள்ளனர்.
“மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கணையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள்
கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென” (அக.
86: 4-7)
மேலே
உள்ள அகநானூற்றுப் பாடல் சங்க காலத்தில் மண மகன், மகள் இருவருக்கும் பொருத்தம் பார்த்து,
மூகூர்த்தக்கால் நட்டு, நீர் தெளித்து, புது மணல் பரப்பி திருமண வீடு அழகு செய்யப்பட்டு
இருந்தது என்பதனைத் தெளிவாக விளக்கியுள்ளது. இதே வழக்கம் இன்றும் இருந்து வருகின்றது.
புது மணல் பரப்புவதற்குப் பதில் நாற்காலி அல்லது பாய் விரித்து உட்கார வைக்கின்றனர்.
தங்களது இல்லத்தினை வண்ணம் பூசி அழகு செய்கின்றனர். மண் வீடாக இருந்தால் நல்ல மணலை
எடுத்து வந்து சுவற்றினை மெழுகி இல்லத்தினைப் புதுப்பித்து அழகு செய்கின்றனர். இன்றைய
தமிழரிடம் காணப்படுவது போன்றே சங்க கால மனிதனும் பெண் வீட்டாரிடம் பெண் கேட்டுச் சென்றுள்ளான்.
தாய், தந்தை வழி உறவு முறைப் பெண்ணாக இருந்தாலும் இவ்வழக்கத்தினைப் பின்பற்றுகின்றனர்.
பெண் கேட்பதற்கு மணமகன் வீட்டார் கிராமத்தில் உள்ள உறவினர், பெரியவர்கள், அறிவரையும்
அழைத்துச் சென்றனர்.
“வாழியான் வாழி யவினி
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
எனவேட் டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்டுறை யூரன் வரைக
எந்தையும் கொடுக்க வெனவேட் டேமே” (ஐங்.
6)
என
ஐங்குறுநூறு இலக்கியம் சான்றாக அமைத்துக் காட்டுகின்றன.
பெண் கேட்டுச் செல்லுதல்
மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்டுச் செல்லும்
போது மணமகனின் தாய் மாமன் மற்றும் சுற்றத்தினரை அழைத்துச் செல்லுவர். பழ வகைகள், மாலை,
பெண்ணிற்கு சீலை முதலான பொருள்கள் கொண்டு செல்லப்படும். பெண் கேட்கச் செல்லும் பெரியவர்கள்
ஒன்று கூடி திருமண நாளினைக் குறிக்கின்றனர். இதன் பிறகே பத்திரிக்கை அச்சடிக்கப் படுகிறது.
அசைவ உணவு முறைகளே பரிமாறப்படுகின்றன. திருமணம் பகல் பொழுதில் நடைபெறுகிறது. வளர்பிறை
நாளில் வைக்கின்றனர். முன்பு சுற்றத்தினர் அனைவரும் வந்து தங்கி இருந்து தங்களது வாழ்க்கையில்
நடந்தவற்றைப் பகிர்ந்து கொள்வதற்காக இரவில் திருமணம் முடித்தனர். தற்காலத்தில் உறவினர்கள்
தங்கினால் செலவு அதிகமாகும் என்று எண்ணி பகலில் திருமணம் வைப்பதாகக் கூறுகின்றனர்.
பெண் கேட்கப் போகின்ற பொழுது சுற்றத்தார்
சூழ சான்றோர்களை அதாவது வயதில் மூத்தோர்களை முன் செல்ல வைத்து தாம்பலத்தில் தேங்காய்,
மாலை, பழங்கள், நிச்சய தார்த்தப் புடவை, குங்குமம், மஞ்சள் முதலான பொருட்களை வைத்து
மணமகள் வீட்டிற்குக் கொண்டு செல்கின்றனர். மணமகன் வீட்டார் ஒரு ஓலைப் பொட்டியில் நெல்,
உப்பு கொண்டு செல்கின்றனர். நெல் விதையினை ஒன்று போட்டால் அனேக நெல் மணிகள் பெருகும்
இதே போன்று புது மணத்தம்பதிகள் தங்களது வாழ்க்கையில் பன் மடங்காகப் பெருக வேண்டும்
என்று எண்ணி நெல்லினைக் கொண்டு செல்கின்றனர். நல்ல நேரம் பார்த்து முகூர்த்தக் கால்
ஊன்றப்படுகிறது. அக்கம்பின் மேல் நுனியில் மா இலை, வேப்பிலை கட்டப்பட்டிருக்கும். மூன்று,
ஐந்து ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெரியவர்கள் அல்லது மாமன் முறையில் உள்ளவர்கள் கம்பினை
நட்டு வைப்பர். திருமணத்திற்கு முன்பு பொட்டி நிறைய இருக்கும் நெல்லில் வெற்றிலை குற்றி,
செம்பில் தண்ணீர் வைத்து, விளக்கு ஏற்றி பெண்கள் ஒன்று கூடி பெண்ணிற்கு சடங்கு சுற்றுகின்றனர்.
பெண்ணின் வீட்டில் முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண் வீட்டில் திருமணம்
நிகழ்தல்
திருமணம் செய்தலில் ஆண் வீட்டார் பெண்
வீட்டிற்கு வந்து பெண்வீட்டில் திருமணத்தை நடத்துவது சிவகங்கை மாவட்ட மக்களின் வழக்கமாகக்
காணப்படுகிறது. சங்க காலத்திலும் இதே முறை இருந்துள்ளதனை அறிய முடிகிறது.
“வதுவையும்
ஈங்கே அயர்ப அதுவேயாம்
அல்கலும்
சூழ்ந்த வினை”
பெண் வீட்டில் திருமணம் நடைபெற்றதனை
மேலே உள்ள பாடல் வரி விளக்குகிறது.
மணமக்களை
வாழ்த்துதல்
வதுவை நடைபெறும் வீட்டில் மங்கலப் பெண்கள் வாழ்த்துக்கள் கூறுவது
நம் பண்டைய மரபு. திருமண வீடுகளில் குழந்தையைப் பெற்ற பெண்கள், கணவருடன் இன்பமாக வாழும்
பெண்கள் என இவர்களே முதன்மைப்படுத்தப் பெறுகின்றனர். பூ, நெல் தூவி வாழ்த்துகின்றனர்.
கணவனை இழந்த பெண், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் வதுவை வீடுகளில் புறக்கணிக்கப்படுகின்றனர்.சங்க
காலத்திலும் ஆண் மக்களைப் பெற்ற பெண்கள் புதுமண தம்பதிகளை வாழ்த்திய மரபு காணப்படுகிறது.
இதனை,
“புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றொற் பெட்டும் பிணையை ஆக! என” (அகம்.86: 11-14)
சங்க
இலக்கியப் பாடலின் வழி அறிய முடிகிறது.
இலக்கியங்களில்
சடங்கு உத்தி என்பது மனிதனை மனிதனாக மீட்டுருவாக்கம் ஆகும். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற
தமிழ்ச் சமூகக் கட்டமைப்பில் மனதளவிலும், உடலளவிலும் மேம்படுத்தும் செயலாகும். இம்மேம்படுத்தலில்
தமிழகம் தாண்டி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தொழில் நுட்ப வளர்ச்சியினைப்
பின்னணியாகக் கொள்ளாமல் தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரியத்தை வதுவைச் சடங்கின் வழி அறியலாம்.
பேரா.முனைவர்.
கரு. முருகன்,
தமிழ்
உயராய்வு மையம்,
ஸ்ரீ
சேவுகன் அண்ணாமலை கல்லூரி,
தேவகோட்டை.
630 303.
தமிழகம்.
No comments:
Post a Comment